'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், தெலங்கானா அரசியலில் இன்று வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே மாநில அரசு, தெலங்கானாவில் சிறப்பு மற்றும் அதிகாலை காட்சிகள் போன்றவைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. அரசுக்கும் திரைத்துறையினருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, தெலங்கானா நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் முதல்வரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தச் சந்திப்பின்போது பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, ”சட்டம் - ஒழுங்கு விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது, தெலுங்கு திரையுலகுக்கு அரசு துணை நிற்கும்” என உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், அல்லு அர்ஜூன் விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில்வைத்து செயல்படுகிறார்கள். எனினும், தியேட்டர் ஊழியர்கள் அங்கிருந்த சூழ்நிலை குறித்து முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் இருக்கையில் அமர்ந்ததும், நெரிசலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது” என்றார்.
தொடர்ந்து அவர், “கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை முன்னதாகவே அல்லு அர்ஜுன் சந்தித்திருக்க வேண்டும். அவரது சார்பில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை யாராவது முன்பே சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த சம்பவத்தில் ரேவதியின் மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏற்கெனவே இழந்ததை இன்னும் பெரிய சோகமாக மாற்றினார்கள். ’நாங்கள் அனைவரும் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறோம்’ என்பதை முன்பே தெரிவித்திருக்க வேண்டும். தங்களின் நேரடித் தலையீடு இல்லாமல் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மனிதாபிமானமின்மை தெளிவாக உள்ளது. எல்லாரும் ரேவதி வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி ஒரு சைகை இல்லாததுதான் மக்களின் கோபம். இந்தச் சம்பவத்தால் யாரோ ஒருவர் தங்கள் உயிரை இழந்தார் என்பதை அறிந்துகொள்ளும் வலியை அர்ஜூனும் உணர்கிறார். இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜூனை மட்டும் பொறுப்பாக்குவது நியாயமில்லை. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முதல்வர் என்ற முறையில், கூட்டநெரிசலைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைக்கு தகுந்த நடவடிக்கை எடுத்தார். சில நேரங்களில், முடிவுகள் சூழ்நிலைகளால் கட்டளையிடப்படுகின்றன. முன்பெல்லாம் சிரஞ்சீவிகூட தன் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம். இல்லாவிட்டால் முகமூடி அணிந்து தனியாக தியேட்டருக்குச் செல்வார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு சிறந்த தலைவர். அவர் ஏழ்மையான இடத்தில் இருந்து உயர்ந்தவர். அவர் YSRCP-ஐப் போலச் செயல்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.