ராஜா சிங் எக்ஸ் தளம்
இந்தியா

தெலங்கானா | பாஜக தலைவர் மாற்றம்? கட்சியிலிருந்து விலகிய எம்.எல்.ஏ.!

தெலங்கானா பாரதிய ஜனதா கட்சி (BJP) பிரிவில் ஏற்பட்ட தலைமைப் பூசலுக்கு மத்தியில், அக்கட்சி எம்எல்ஏ டி.ராஜா சிங், இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

Prakash J

கட்சியிலிருந்து விலகிய பாஜக எம்.எல்.ஏ.

தெலங்கானா மாநில பாஜக பிரிவின் புதிய தலைவராக என்.ராம்சந்தர் ராவ் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான் அக்கட்சி எம்எல்ஏவான டி.ராஜா சிங், பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ராம்சந்தர் ராவை பாஜக மாநிலத் தலைவராக நியமித்த முடிவு தனக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜா சிங்

இதுகுறித்து அவர், “ஊடக அறிக்கைகளின்படி, ஸ்ரீராம்சந்தர் ராவ் தெலங்கானாவின் புதிய பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இந்த முடிவு எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயர்விலும் தாழ்விலும் கட்சியுடன் நின்ற லட்சக்கணக்கான காரியகர்த்தர்கள், தலைவர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நமது மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த, கட்சியை முன்னோக்கி வழிநடத்த வலிமை, நம்பகத்தன்மை மற்றும் தொடர்பு கொண்ட பல திறமையான மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் உள்ளனர். நான் கட்சியிலிருந்து விலக வேண்டியிருந்தாலும், இந்துத்துவாவின் சித்தாந்தத்திற்கும், நமது தர்மத்திற்கும் கோஷாமஹால் மக்களுக்கும் சேவை செய்வதற்கும் நான் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். நான் தொடர்ந்து என் குரலை உயர்த்தி, இன்னும் அதிக பலத்துடன் இந்து சமூகத்துடன் நிற்பேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

தற்போது கோஷாமஹால் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தாக்கூர் ராஜா சிங், சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர். மேலும் அடிக்கடி குற்ற வழக்குகளையும் எதிர்கொண்டவர் ஆவார். நடப்பாண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில், ராம நவமி ஊர்வலத்தின்போது, ​​நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தியதாகவும், காவல்துறையினருக்கு குற்றவியல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா சிங்

அதேநேரத்தில், அடுத்த மாநில தலைவராகத் தேர்வு செய்யப்பட இருக்கும் ஸ்ரீராம்சந்தர் ராவ், உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், மாநில சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். மேலும் அவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மற்றும் பாஜகவின் சட்டப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் ஹைதராபாத் பிரிவிற்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார். பாஜகவின் மத்தியத் தலைமை அவரது பெயரை அனுமதித்துள்ளதாகவும், வேறு எந்தத் தலைவரும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் அவர் நாளை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் அம்மாநில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.