தெலங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை மீட்டெடுக்க புதிய முயற்சியை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தெலங்கானாவின் மகபூப்நகரில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது ஒன்றிரண்டு அல்ல.. 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம். ஒவ்வொரு பக்கமும் தனது விழுதுகளை வீசி கிட்டத்தட்ட 3 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலமரம் படர்ந்துள்ளது. ஏராளமான குருவிகள் தினந்தினம் இந்த ஆலமரத்தில் வந்து தங்கிச் செல்கின்றன. சுற்றுலாத் தளமாகவும் விளங்கி வருகிறது. பலதலைமுறை மக்கள் இந்த ஆலமரத்தை பார்த்துவந்த நிலையில் இந்த ஆலமரத்திற்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆலமரத்தின் பல கிளைகளை கரையான் உள்ளிட்ட பூச்சிவகைகள் கடுமையாக தாக்கியுள்ளன. இதனால் ஆலமரம் பட்டுபோகும் என்ற அபாய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆலமரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலமரத்தின் கிளைகளில் உள்ள பட்டைகளில் துளையிடப்பட்டு, துளை வழியாக பூச்சிக்கொல்லி மருந்துகள், ஊட்டச்சத்து நீர் போன்றவை ஆலமரத்திற்குள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மரத்தை பாதிக்கும் பூச்சிகள் கொல்லப்படும். தற்போது எடுக்கும் முயற்சியால் பூச்சிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு ஆலமரம் விரைவில் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.