இந்தியா

"ஒரு டோஸ் ரூ.900... செலுத்துமிடம், எம்எல்ஏ அலுவலகம்" - தடுப்பூசி சர்ச்சையில் பாஜக தலைவர்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தடுப்பூசியை வைத்து, கர்நாடக பாஜகவின் இளம் தலைவரான தேஜஸ்வி சூர்யாவும், அவரது உறவினரும் வருமானம் ஈட்டி வருவதாக எழுந்துள்ள சர்ச்சை, அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சற்றே விரிவாக பார்ப்போம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே வழி என மருத்துவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை ஒருமித்த குரலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறைகள் இருந்து வருவது கவலை அளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தடுப்பூசி பற்றாக்குறைகள் ஒருபுறம் இருக்கும் வேளையில், எப்போதும் அரசியல் சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற கர்நாடகா, தற்போது தடுப்பூசி சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதுவும் அம்மாநிலத்தை ஆளும் பாஜகவின் இளம் தலைவரான தேஜஸ்வி சூர்யாவின் பெயர் இந்த சர்ச்சையில் அடிபடுவது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தாக்கம் அதிகம். பெங்களூருவில் கொரோனா பாதிப்பின் நிலை மற்ற நகரங்களை கவலைகொள்ள செய்துள்ளது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, பெங்களூரு நகரின் ஒரு பகுதியான பசவனகுடி தொகுதியைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான வெங்கடேஷ் என்பவர் தனது மகனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த, மருத்துவமனை ஒன்றிடம் விசாரித்துள்ளார்.

அவரிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர், "தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால் நீங்கள் முதலில் பசவனகுடி எம்.எல்.ஏ. அலுவலகம் அல்லது வாசவி மருத்துவமனையில் அதற்காக, பதிவு செய்ய வேண்டும். ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை 900 ரூபாய்" என்று கூறியிருக்கிறார். தடுப்பூசி செலுத்த மருத்துவமனைகளில் அல்லது அரசு இணையங்களில் பதிவு செய்வதுதான் வழக்கம். ஆனால் மருத்துவமனை ஊழியர், பசவனகுடி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பதிவு செய்ய சொன்னது சந்தேகத்தை ஏற்படுத்த, அது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பி இருந்திருக்கிறார் சமூக ஆர்வலர் வெங்கடேஷ். இதற்கு, கிடைத்த பதில் அவரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மருத்துவமனை ஊழியர், ``பசவனகுடி எம்எல்ஏ அலுவலகத்திலிருந்துதான் இந்த பகுதி மருத்துவமனைகளுக்கு தேவையான தடுப்பூசிகள் கொண்டுவரப்படுகிறது. நாங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிர்வகித்து வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

அப்போது, விலை அதிகமாக இருக்கிறதே, என மீண்டும் வெங்கடேஷ் கேள்வியை முன்வைக்க, "தடுப்பூசி செலுத்த வசூலிக்கப்படும் இந்த பணம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்குதான் சென்று சேரும்" என்று சொல்லவும், இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரிக்க ஆரம்பித்துள்ளார். விசாரணையில் பெங்களூரு தெற்கு தொகுதி எம்பியும், பாஜக இளம்தலைவரான தேஜஸ்வி சூர்யா மேற்பார்வையில் தான் இந்த தடுப்பூசி சப்ளை நடப்பதாகவும், பெங்களூரு தெற்கு தொகுதிக்குட்பட்டு இருக்கும், பசவனகுடி எம்.எல்.ஏவுக்கும் தேஜஸ்விவுக்கும் இதில் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த பசவனகுடி எம்.எல்.ஏ. ரவி சுப்ரமணியாவும், தேஜஸ்வியும் உறவினர்கள்.

இந்த தகவலை சேகரித்த வெங்கடேஷ், பசவனகுடி எம்.எல்.ஏ. ரவி சுப்ரமணியா மீதும், தேஜஸ்வி சூர்யா மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க விஷயம் பூதாகரமானது.

சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வி சூர்யா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கட்டண தடுப்பூசி முகாம்களை நடத்தினார். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டிய அரசு பிரதிநிதியாக இருந்துகொண்டு, அவரே கட்டண முகாம் நடத்தியது மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்த விமர்சனங்களை எதிர்கொண்டார் தேஜஸ்வி. இதன்பிறகு எதிர்ப்புக்கு பணிந்து முகாம் நடத்துவதை கைவிட்டார். இந்த விவகாரம் ஓய்வதற்குள், தற்போது பசவனகுடி விவகாரம் வெடித்துள்ளது.

இதையடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்டண தடுப்பூசி விஷயத்தில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. பெங்களூரு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், "கொரோனா போன்ற கடுமையான சூழலில் அவதிப்படும் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளில் கூட வருமானம் ஈட்ட நினைக்கின்றனர் தற்போதைய ஆளும் அரசு தலைவர்கள்.

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பற்றாக்குறைகள் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, அதனை தங்களுக்கு சாதமாக்கி தனியார் மருத்துவமனைகளின் மூலம் இவர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். மாநகரம் முழுதும் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள தேஜஸ்வி ஊக்குவிக்கும் விதமாக அவரின் புகைப்படங்களை கொண்ட பதாகைகளே நிரம்பியுள்ளன. இதுவே அவர்களின் கூட்டணியை வெளிக்காட்டுகிறது" என்று அடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர்.

எனினும் தேஜஸ்வி தரப்பு, பசவனகுடி விவகாரத்தை மறுத்துள்ளது. "எனக்கும், அந்த மருத்துவமனை நிர்வாகத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாகவே அங்கு எனது பிரசார பதாகைகள் வைக்கப்பட்டன. மற்றபடி அதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று தனது அறிக்கையில் தேஜஸ்வி மறுப்பு தெரிவித்துள்ளார். மறுப்பு தெரிவித்த போதிலும், இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் புதிய புகைச்சலை கிளப்பியுள்ளது. இதில் முதல்வர் எடியூரப்பா தலையிட்டு, நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது