வெளிநாடுகளில் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இதுஒருபுறம் இருக்க சிஏஏவுக்கு ஆதரவாகவும் சில இடங்களில் பேரணி நடைபெற்றன. பாஜக சார்பில் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய வம்சாவளியினர், தொழில்நுட்ப ஊழியர்கள் CAAக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
medium.com என்ற இணையப் பக்கத்தின் வாயிலாக “TechAgainstFascism” என்று குறிப்பிடப்பட்டு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. CAAக்கு கண்டனம் தெரிவித்து எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்துக்கு பல்வேறு நிறுவன ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தில், CAAக்கு எதிராக போராடியவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆயுதமே அகிம்சை தான் என்றும், பல்வேறு கலாசாரங்கள், மொழி கொண்ட இந்தியா தற்போது பாசிச ஆட்சி முறையால் பிளவுப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை எதிர்ப்பதாகவும், கூகுளின் சுந்தர் பிச்சை, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், மைக்ரோசாப்டின் சத்ய நாதெள்ளா, ட்விட்டர் நிறுவனர் ஜாக் உள்ளிட்ட பலரும் CAAக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.