அதுல் சுபாஷ் எக்ஸ் தளம்
இந்தியா

”மனைவி தந்த மனஅழுத்தம்” 24 பக்க கடிதம்.. உ.பி. பொறியாளர் எடுத்த முடிவு.. விசாரணையில் வெளிவந்த தகவல்!

மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் உ.பியைச் சேர்ந்த பொறியாளரான அதுல் சுபாஷ், தற்கொலை செய்துகொண்ட விஷயம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மனைவி தந்த மனஅழுத்தம் தற்கொலை செய்துகொண்ட பொறியாளர்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பொறியாளரான இவர், தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, அவர் கைப்பட எழுதிய 24 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தனது நிம்மதியை அவர்கள் கெடுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். இதன் காரணமாகவே தாம் தற்கொலை செய்துகொண்டதாகவும், தனது உடலை அவர்களது கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளும்படியும், தனது மகனுக்கு பரிசு ஒன்று வைத்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் வெளியான தகவல்

மேலும் இது தொடர்பான விசாரணையில், ”அதுல் சுபாஷின் மனைவி நிகிதா எட்டு மாதங்களுக்கு அவரைவிட்டு பிரிந்து நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர், அவரது குடும்பத்தினர் உதவியுடன் அதுல் மீது பொய் புகார் அளித்துள்ளார். மேலும் நிகிதா, அதுல் சுபாஷை அவரது மகனைச் சந்திக்கக்கூட அனுமதிக்கவில்லை. தவிர, இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின்போது, வழக்கைத் தீர்ப்பதற்கு முதலில் அதுல் மனைவியும் அவரது குடும்பத்தினரும் ரூ1 கோடி கேட்டதாகவும், பின்னர் அதை ரூ.3 கோடியாக உயர்த்தியும் கேட்டுள்ளனர். ’பொய் வழக்குகளால் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்’ என அதுல் நீதிபதியிடம் கூறியபோது, ​​’அப்படியானால் நீங்கள் ஏன் தற்கொலை செய்யக்கூடாது’ என மனைவி அப்போது பதிலளித்தார். ஆனால், அதைக் கேட்டு அந்த நீதிபதியே சிரித்தப்படி தன்னை அறையைவிட்டு வெளியேறும்படி கூறினார்.

மேலும், ‘உனது குடும்பத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்’ எனக் கூறினார், ’வழக்கைத் தீர்ப்பதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் அதுல் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்படி, பொய்யான புகார் மற்றும் பெரும் தொகைக்கான கோரிக்கை ஆகியவற்றால் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட அதுல் தற்கொலை செய்துகொண்டார். நீதிமன்றமும் சுபாஷின் மனைவிக்கு ஆதரவாகவே செயல்பட்டது” என அவருடைய கடிதம் குறித்த விசாரணையில் தெரிய வந்துள்ளது

ட்ரம்ப், எலான் மஸ்க்கிடம் நியாம் கேட்ட அதுல்

இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட சுபாஷ் கடைசியாக வெளியிட்டிருந்த வீடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்து பேசியுள்ளார். அதில், ”நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டரீதியான இனப்படுகொலை நடந்துவருகிறது. இங்குள்ள பல சித்தாந்தங்கள், கருக்கலைப்பு ஆகியவற்றிலிருந்து மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுங்கள். இந்தியாவில் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுங்கள்'' என கோரிக்கை வைத்துள்ளார். இதைவைத்தே இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

இதற்கிடையே, அதுல் சுபாஷ் தனது தற்கொலைக் குறிப்பில் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவரது பிரிந்த மனைவி நிகிதா சிங்கானியாவிடமே அனைத்து பதில்களும் இருப்பதாகவும் நிகிதாவின் மாமா சுஷில் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத் கொடுத்த பேட்டி

இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட அதுல் சுபாஷின் வீடியோ குறித்து எம்பி கங்கனா ரனாவத், “ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உள்ளது. அவரது வீடியோ நெஞ்சை பதறவைக்கிறது. போலி பெண்ணியம் கண்டிக்கத்தக்கது. அவரது வருவாய்க்கு மேல், கோடிக்கணக்கான ரூபாய் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. அந்த நபர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாலேயே தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒரு தவறான பெண்ணை முன்மாதிரியாகக் கொண்டு துன்புறுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையை மறுக்க முடியாது. 99% திருமண வழக்குகளில் ஆண்களே தவறு செய்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற தவறுகளும் நடக்கின்றன. திருமணங்கள் மரபுகளால் பிணைக்கப்படும் வரை அவை நன்றாக நடக்கும். சமீபகாலமாக அவை, சோசலிசம், கம்யூனிசம் ஆகியவற்றால் சிதைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வரதட்சணைக் கொடுமை, கொலை, இயற்கைக்கு மாறான உடலுறவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நிகிதா, அதுல் மீது நிறைய வழக்குகள் தொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.