பிற சாதி என்பதால் பெற்றோர்கள் திருமணத்திற்காக சம்மதிக்காததால் இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபிஜித் மோகன்(25), ஸ்ரீலட்சுமி(21). இவர்கள் இருவரும் பெங்களூருவிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் முதல் தங்களது குடும்பத்தினரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் ஆகியும் இருவரும் தங்களது பெற்றோரை தொடர்பு கொள்ளாததால், பெங்களூரு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிரமாக இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி மோகன் மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய இருவரும் மிகவும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இவர்களின் இருவரின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோகன் மற்றும் ஸ்ரீலட்சுமியின் காதலுக்கு சாதியைக் காரணம் காட்டி அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.
(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)