ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர் முகமது ஆஸம். இவர் கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வே இஞ்சினியராக பணி புரிந்து வந்துள்ளார். முகமது ஆஸம் கத்தாரில் இருந்து வந்த தனது நண்பர் முகமது சலாம் மற்றும் நண்பர்களுடன் காரில் நீண்ட பயணம் சென்றுள்ளனர். அப்பொழுது கர்நாடக மாநிலம் பிதார் கிராமத்தில் காரை நிறுத்தியுள்ளனர். பிதார் கிராமம் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ளது. சாலையின் அருகில் இருந்த குழந்தைகளுக்கு தங்களிடம் இருந்த சாக்லேட்டுகளை அவர்கள் கொடுத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனே காருக்கு அருகில் ஏராளமான கிராமத்தினர் ஒன்று கூடிவிட்டனர். அவர்கள் காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். பயந்துபோன முகமது ஆஸம் உள்ளிட்டோர் காரில் ஏறிக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் காரினை பின் தொடர்ந்து சேஸ் செய்துள்ளனர். வேகமாக சென்ற காரானது, இருசக்கர வாகனங்களின் மீது மோதி பாலத்திற்கு அருகில் வீழ்ந்தது. இதனிடையே, வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியதில் பலரும் அங்கு ஒன்று கூடிவிட்டனர்.
அங்கு திரண்ட கிராமத்தினர் காரில் இருந்தவர்களை வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக தாக்கினர். நூற்றுக்கணக்கானோர் அங்கு இருந்த போதும் யாரும் கொடூரமான அந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை. அப்போது, போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர். ஆனால், அதற்குள் முகமது ஆஸம் இறந்துவிட்டார். மற்றவர்கள் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முகமது ஆஸம் சகோதரர் அக்ரம் கூறுகையில், “அவர்கள் நீண்ட பயணம் செல்லலாம் என காரில் போனார்கள். என்னுடைய சகோதரர் குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்துள்ளார். அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றுகூடி அவர்களை தாக்கியுள்ளனர். அவர்கள் குழந்தை கடந்த வந்தவர்கள் என்று எப்படி நினைத்தார்கள்?. இதுபோன்ற கும்பல் தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். எனது சகோதரர் ஒரு சாஃப்ட்வே இன்ஞ்சினியர். அதுமட்டுமல்ல அவர் இரண்டு வயது குழந்தைக்கு தந்தை. அவர் ஒரு சாதாரண மனிதர்” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக 32 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அந்த வாட்ஸ் அப் குரூப் அட்மினும் ஒருவர். கைது செய்யப்பட்டவர்களில் சில பெண்களும் உள்ளனர். நாடு முழுவதும் இதுபோன்று வாட்ஸ் அப் வதந்திகளால் 20க்கும் மேற்பட்டோர் கும்பல் தாக்குதலில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். கடைசியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 பேர் ஒரே நேரத்தில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
வாட்ஸ் வதந்திகளுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வாட்ஸ் அப் நிறுவனத்திற்கே விளக்கம் கேட்டு நெருக்கடியும் கொடுத்தது. ஆனால், அப்படி இருந்தும் தற்போது மேலும் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.