இந்தியா

9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்

webteam

திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என பள்ளி ஆசிரியர் ஒருவர் 9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குர்நூலில் உள்ள தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சங்கர். 30 வயதான சங்கர், அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மாணவியை வற்புறுத்தி வந்த சங்கர், இது குறித்து அந்த மாணவியின் பெற்றோரையும் சந்தித்து பெண்ணை திருமணம் செய்து தரும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் 14 வயதே ஆன பெண்ணை திருமணம் செய்து தர பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து சங்கரை நிராகரித்துவிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டினுள் இருந்த மாணவியின் தம்பியை வெளியே அனுப்பிய சங்கர், பெண்ணின் கழுத்தை தான் வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். வலியால் துடித்த மாணவி அலற சங்கர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

காயமடைந்த இருவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இருவரும் அபாயகரமான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து பள்ளி ஆசிரியர் சங்கரை பணியில் இருந்து நீக்க குர்நூல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு தலைக்காதல் விவகாரத்தால் ஆசிரியரே மாணவியை கொலை செய்ய முயன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.