இந்தியா

இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?

PT

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் விலை மேலும் உயரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் இறக்குமதியால் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு குறையும் சூழல் உருவாவதை தடுக்க, மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவற்காக, சுங்க வரி தற்போது 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியும் நிலையில், இறக்குமதி வரி அதிகரிப்பினால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். தங்கத்தின் இறக்குமதி திடீரென்று அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திலும் இதே அளவு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது என கணிக்கப்பட்டுள்ளது.

தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவற்காக, சுங்க வரி தற்போது 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தங்கம் இறக்குமதி மேலும் அதிகரிக்காமல் தடுக்க உதவும் என கருதப்படுகிறது.

நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு கச்ச எண்ணெய், உரங்கள், சமையல் எண்ணெய், மூலப்பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அத்தியாவசியமானது. கோவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் தாக்கம் காரணமாக, உலகெங்கும் விலைவாசி உயர்வு பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா வட்டி விகிதங்களை அதிகரித்திருப்பதால், அமெரிக்கா டாலரின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் போதிய அந்நிய செலாவணி இருப்பு இல்லாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில், தேவையற்ற இறக்குமதிகளை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

--கணபதி சுப்ரமணியம்