நாடெங்கும் 396 மாவட்டங்களில் இருந்து 55,000 ரயில் பயணிகளிடம் கருத்து கேட்டு அதன் விவரங்களை லோக்கல்
சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. கடைசி நேர
பயணத்திற்கான தட்கல் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்துவிடுவதாக 70% பேர்
தெரிவித்துள்ளனர்.
வலைத்தளம் திறந்த ஒரு நிமிடத்திலேயே வெயிட்டிங் லிஸ்ட்
காட்டுவதாகவும் பலர் ஆதங்கப்படுகின்றனர். இது தவிர
சுற்றிக்கொண்டே இருப்பது; இணையதளம் முடங்குவது; பணம்
செலுத்தும் முன் டிக்கெட் காணாமல் போவது; என பல குறைபாடுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது போன்ற சிக்கல்களால் டிக்கெட் பதிவு செய்ய பயண முகவர்களை சார்ந்திருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். சிலர் டிக்கெட் வாங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை வரை பெற வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர்.
பத்தில் 4 பேர் மட்டுமே ஐஆர்சிடிசி நம்பகமான முன்பதிவுத்தளமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
ஐஆர்சிடிசி தளத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பிரச்சினைகள் இருப்பதாகவும் பல்வேறு மாற்றங்கள் அடிக்கடி கொண்டு வந்தாலும் சிக்கல்கள் தீரவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பயணிகள் கூறிய குறைகளை ரயில்வே அமைச்சகத்திடம் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .