இந்தியா

முதற்கட்டமாக 100 பாதைகள்.. 150 ரயில்கள்.. - தனியார்மயமாகும் ரயில்வேதுறை

முதற்கட்டமாக 100 பாதைகள்.. 150 ரயில்கள்.. - தனியார்மயமாகும் ரயில்வேதுறை

PT


எந்தெந்தப் பாதைகளை தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே துறை. ஏனெனில் இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணம் செய்து கொண்டுள்ளனர். இதுவரை முழுக்க முழுக்க அரசு சார்பில் இயங்கிவந்த இந்த ரயில்வே துறை இனிமேல் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 100 பாதைகளில் மட்டும் இந்தத் தனியார் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்த நிதியமைச்சர் அந்தப் பாதைகளில் 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் இதற்காக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் செயல்பட விரும்பும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே பொதுமக்களிடம் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மத்தியில் இந்தத் திட்டம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தனியார் ரயில்கள் முதற்கட்டமாக மும்பையிலிருந்து டெல்லிக்கும், சென்னையிலிருந்து டெல்லிக்கும், டெல்லியிலிருந்து ஹவுராவுக்கும், ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து புனே உள்ளிட்ட பாதைகளில் இயக்கப்பட இருக்கிறது.

இந்தத் தனியார் ரயில்கள், ஏற்கெனவே அந்தப் பாதையில் இயங்கி வந்த ரயிலுக்கு அடுத்து 15 நிமிடங்கள் தள்ளி இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களில் தலா மொத்தம் 16 பெட்டிகள் இடம் பெற இருக்கின்றன. அதிக பெட்டிகள் கொண்ட ரயிலானது நீண்ட தூர பயணத்திற்கு இயக்கப்பட மாட்டாது. மணிக்கு 160 கிமீ வேகத்தில், குறிப்பிட்ட பாதைகளில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில்களின் பயணத் தொகையை தனியார் நிறுவனங்களே முடிவு செய்யும் என்றும் அந்த ரயில்களுக்கான நிதியளித்தல், கொள்முதல் செய்தல், இயக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கான முழுப் பொறுப்பு தனியார் நிறுவனங்களையே சாரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ரயில்களின் பாதை மாற்றத்திற்காக 2,250 கோடி ரூபாயும், அதனை இரட்டிப்பாக்க 700 கோடியும், உதிரிப்பாகங்கள் தயாரிப்புக்கு 5,786 கோடியும், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு 1,650 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.