புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி அரசும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் 50 நாட்களுக்கு மேலாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து புதுச்சேரியில் நேற்று மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், “மது விற்பனைக்கு கொரோனா வரி விதிப்பு போட வேண்டியுள்ளதால் இது குறித்து மீண்டும் அமைச்சரவை கூடி முடிவு செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின்பு அரசாணை வெளியிடப்பட்ட பிறகு தான் மதுக்கடைகள் திறக்கப்படும். மதுக்கடைகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.