மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தமிழக அரசின் உதவித்தொகை தாமதமாகி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படலாம் எனக் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டது அரசியல் சர்ச்சையை கிளப்பியது. அரசு, கட்டணம் ஏற்கெனவே செலுத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக ஒப்புதல் கிடைத்தவுடன் மீதித் தொகை வழங்கப்படும் என விளக்கம் அளித்தது. “என்னையும் ரோகித் வேமுலா நிலைக்கு மாற்றாதீர்கள்” என்ற அவரது வேண்டுகோள், சாதி பாகுபாடு, மாணவர் உரிமைகள், ரோகித் வேமுலா மரணம் போன்ற விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், தமிழக அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படிக்க வந்த தனக்கு இந்த ஆண்டுக்கான நிதியுதவி இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சட்டமன்றம் வரை பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில், சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர்களுக்கான நிதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். ஆனால், அதற்குப் பிறகும் “எனக்கு நிதி வரவில்லை” என்று பாரதிதாசன் தொடர்ந்து தெரிவித்திருந்தார். நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “தமிழக அரசிடமிருந்து வர வேண்டிய நிதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் என்னை பல்கலைக்கழகத்திலிருந்து eliminate செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கண்ணீருடன் உருக்கமாக பேசியிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மாணவருக்கு ஏற்கெனவே இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்பட்டுவிட்டதாகவும், அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர் அளித்த உத்தேசப் பட்டியலுக்கான ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் மீதமுள்ள உதவித்தொகை வழங்கப்படும் என்றும் விளக்கமளித்திருக்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பாரதிதாசன் கூறிய ஒரு வரிதான். “என்னையும் ரோகித் வெமுலா நிலைக்கு மாற்றிடாதீங்க” என்று அவர் கண்ணீருடன் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், “யார் அந்த ரோகித் வெமுலா? ஏன் அவரை பாரதிதாசன் குறிப்பிட்டார்?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
யார் அந்த ரோகித் வெமுலா? முனைவர் பட்ட ஆய்வாளரான அவரது பெயர் ஏன் மீண்டும் பேசப்படுகிறது? என்பதை பார்க்கலாம்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் வெமுலா. அவரது தாய் ராதிகா வெமுலா, மாலா சமூகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தந்தை வட்டேரா சமூகத்தைச் சேர்ந்தவர் எனப் பின்னர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. ரோகித் சிறுவயதிலேயே தனது தாயுடன் வளர்ந்து வந்தார். சாதியப் பாகுபாடு மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும், கல்விதான் தனது எதிர்காலத்திற்கான ஒரே வழி என்பதை உணர்ந்து படிப்பில் சிறந்து விளங்கிய ரோகித் வேமுலா, ஹைதராபாத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தார். அவர் பயின்ற பல்கலைக்கழகத்திலும் சாதியப் பாகுபாடு இருப்பதாகக் கூறி செயல்பட்டு வந்த அம்பேத்கர் மாணவர் அமைப்பில், ரோகித் வேமுலா தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு 2015-இல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, அம்பேத்கர் மாணவர் அமைப்பு பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தியது. அதன்பிறகு, அம்பேத்கர் மாணவர் அமைப்பினருக்கும், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ஏபிவிபி மாணவர் தலைவர் சுஷில் குமார், தன்னை அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகக் குற்றம்சாட்டி புகார் அளித்தார். மறுபுறம், அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.
இந்த விவகாரம் பல்கலைக்கழக விசாரணைக்கும் சென்றது. பல்கலைக்கழகத்தின் விசாரணைக்குப் பிறகு ரோகித் வேமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர்களுக்கு கல்வி ரீதியான இடைநீக்கம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய துணைவேந்தர் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்டார். அவருக்கு ரோகித் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ’பட்டியலின மாணவர்கள் மீது சாதிய வன்கொடுமை ஏவியே ஏவிபி அமைப்போடு இணக்கமாக செயல்படுகிற நீங்கள், பாதிக்கப்பட்ட எங்களை இப்படி வன்மையாகக் கண்டிப்பதற்கு, எங்களை கருணைக் கொலை பண்ணிவிடுங்கள்’ என்று ஒரு கடிதம் எழுதினார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, பின்னர் அந்த நடவடிக்கை மாற்றப்பட்டு, 2015 டிசம்பரில் ரோகித் வேமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் கல்லூரியில் படிப்பைத் தொடரலாம், ஆனால் விடுதியில் தங்கக் கூடாது, நிர்வாகக் கட்டடத்திற்குள் செல்லக் கூடாது, மாணவர் சங்கத் தேர்தலில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதித்து கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்..
விடுதியில் இருந்து வெளியேறிய ரோகித் வேமுலாவும் அவரது நண்பர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில் தங்கிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அப்போது பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. ஒரு கையில் சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படமும், மற்றொரு கையில் தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் வெளியேறுவது போன்ற காட்சிதான் அது. இந்தச் சூழலில்தான் 2016 ஜனவரி 17 அன்று ரோகித் வேமுலா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்கலைக்கழகங்களில் சாதியப் பாகுபாடு மற்றும் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்த விவாதமும் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.
ரோகித் வேமுலா விட்டுச் சென்றதாகக் கூறப்படும் கடிதமும் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக மாறியது. நானும் அனைவரும்போலதான் அமைதியாக இருக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் வரலாறு என்னை அப்படி இருக்க விடவில்லை...”
“ஒரு மனிதனின் மதிப்பு அவனது உடனடி அடையாளமாகவும், அவனுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளாகவும் சுருக்கப்பட்டுவிட்டது. ஒரு வாக்காக, ஓர் எண்ணாக, ஒரு பொருளாகக் கருதப்படுகிறான். ஒரு மனிதன் ஒரு சிந்திக்கும் மனமாக ஒருபோதும் பார்க்கப்படுவதில்லை” என்ற பொருளில் அவர் எழுதியிருந்தார். மேலும், தான் ஓர் அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, ரோகித் வேமுலாவின் சாதிப் பின்னணி குறித்தும் பின்னர் விசாரணைகள் நடைபெற்றன. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையிலான விசாரணைக் குழுவும் அவரது சாதிச் சான்றிதழ் தொடர்பாக கேள்விகளை எழுப்பியது. அந்தக் குழு அறிக்கையில், ரோகித் வேமுலா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மாறாக குண்டூர் மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில், கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரோகித் வேமுலா ஹிந்து-மாலா சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த சமூகம் ஆந்திரப் பிரதேசத்தில் பட்டியலினப் பிரிவில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் வெவ்வேறு அரசுத் தரப்புகளின் முடிவுகள் மாறுபட்டிருந்தன. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த ரோகித் வேமுலா மரணம் தொடர்பான வழக்கில், 2024-ம் ஆண்டு தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த மூடல் அறிக்கை (Closure Report) புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வேமுலா என்ற மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும், அவர் உயர்கல்வி பயில்வதற்காக அவரது தாயார் போலியான சான்றிதழ் பெற்றிருக்கிறார். அவர் பட்டியலினத்தவரே இல்லை. இந்த உண்மை ரோகித்துக்கும் தெரியும். அந்த உண்மை வெளியே தெரிந்துவிட்டால், தன்னுடைய படிப்பிற்கு ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்ற மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருந்ததாலேயே ரோகித் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்று தெலங்கானா போலீஸ் அந்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதனடிப்படையில், தற்கொலை செய்துகொண்டதற்கு அடிப்படை முகாந்திரம் அல்லது குற்றம் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று இந்த வழக்கு விசாரணையில் முடிக்கிறார்கள்.
இந்த முடிவை ரோகித் வேமுலாவின் தாய் ராதிகா வேமுலா மறுத்தார். மேலும், அவரது தாயார் உள்ளிட்டோர் சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று தெலங்கானா காவல்துறை டிஜிபி 2024-ல் அறிவித்தார். இன்னமும் ரோகித் வழக்கில் சட்டப் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது...