hmpv pt web
இந்தியா

HMPV வைரஸ் தொற்று | தமிழ்நாடு அரசு, மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கொடுத்த தெளிவான விளக்கம்

HMPV வைரஸ் தொற்று தொடர்பாக, தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.

Prakash J

சீனாவின் வடக்குப் பகுதிகளில் தற்போது அதிகம் பரவி வரும் வைரஸ்களில் ஒன்று, HMPV (human metapneumo virus). இந்த வைரஸ், 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதாகத் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக HMPV (human metapneumo virus) வைரஸ் தொற்றானது, இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவிதமான வெளிநாட்டுப் பயணமும் செய்யாத சூழ்நிலையிலும் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HMPV வைரஸ்

அதேநேரத்தில், ”இது பருவ காலங்களில் வரும் சாதாரண தொற்று போன்றதுதான் என்றும், கொரோனா போல அச்சப்பட தேவையில்லை” என மருத்துவர்கள் மற்றும் சீன மருத்துவ ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

என்றாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், பரவிவரும் HMPV வைரஸ் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கர்நாடகா சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி பொதுமக்கள் மாஸ்க் அணிய கர்நாடகா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

HMPV வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, “HMP வைரஸ் புதியதல்ல என நிபுணர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்; இது முதன்முதலில் 2001இல் கண்டறியப்பட்டது; பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வருகிறது; கவலைப்பட ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகர் செளமியா சாமிநாதன், ”ஏற்கெனவே அறியப்பட்ட HMPV சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது; சளி ஏற்படும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்; கடும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

HMPV வைரஸ் தொற்று

HMP வைரஸ் புதியதல்ல; 2001இல் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ்தான். நீண்ட ஆண்டுகளாகவே இந்த வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. HMP வைரஸ் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது; இருவரின் உடல் நிலை சீராக உள்ளது. HMPV தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும்” எனத் தமிழக சுகாதாரத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.