மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள உலகிலே மிகப்பெரிய சிலையில் தமிழ் மொழியை சிதைத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
“The statue of Unity(ஒற்றுமையின் சிலை)” எனப் பெயரிடப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை, பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே மிக பிரம்மாண்டமாக இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள உலகிலே மிகப்பெரிய சிலையில் வளாகத்தில் உள்ள பலகையில் பல்வேறு மொழிகளில் The statue of Unity என்பது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் “The statue of Unity” என்பதை “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள்.
கூகுள் டிராஸ்சிலேட்டில் மொழிபெயர்த்திருந்தால் கூட ஒற்றுமை சிலை என்று வந்திருக்கும். ஆனால், இவ்வளவு மோசமாக தமிழை கொலை செய்யும் வகையில் பொறுப்பற்று மொழிபெயர்த்துள்ளார்கள்.
பின்னர், இதுகுறித்து கேள்விகள் எழவே, உடனடியாக தமிழில் எழுதப்பட்டதை மறைக்கும் வகையில் பெயிண்ட் அடித்துள்ளார்கள். அப்படியிருந்தும், தமிழில் எழுதப்பட்டது தெளிவாக தெரிகிறது.
நாளை நடைபெறவுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் கடம்பூர் ராஜு இருவரும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டேல் சிலை குறித்து சில தகவல்கள்:-
182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகிலேயே மிக உயரமான சிலை
‘ஒற்றுமையின் சிலை’யானது 33 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த ராம் வி சுதார் என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்தார். எல்&டி நிறுவனத்தால் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது.
சிலையை அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.2,989 கோடி
நிலநடுக்கத்தின் போது 6.5 ரிக்டர் வரை தாக்கக் கூடியது. புயலின் போது 60மீட்டர்/செகண்ட் வேகத்தை தாக்குபிடிக்கும்
சிலையில் கட்டப்பட்டுள்ள கேலரியில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் பார்க்கலாம்.
பட்டேலின் 143வது பிறந்த நாளில் இந்தச் சிலை திறக்கப்படுகிறது.