இந்தியா

இலங்கை சிறையிலுள்ள தமிழர் இந்திய சிறைக்கு எப்போது மாற்றப்படுவார்? மத்திய அரசு பதில்

இலங்கை சிறையிலுள்ள தமிழர் இந்திய சிறைக்கு எப்போது மாற்றப்படுவார்? மத்திய அரசு பதில்

நிவேதா ஜெகராஜா

இலங்கை சிறையில் உள்ள தமிழரை, ஜனவரி மாதம் இந்திய சிறைக்கு மாற்றுவதாக இலங்கை தூதரகம் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராமநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருன் நிஷா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ரிபாயுதீன் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளார். இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்திய சிறைக்கு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத்தரப்பில், மனுதாரரின் கணவரை ஜனவரி மாதம் இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவதாக இலங்கை தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது, ஜனவரியில் அவர் இந்தியாவுக்கு மாற்றப்படுவார் என இலங்கை தூதரகம் தகவல் கூறியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.