வடமாநில நோயாளிகளுக்கு உதவி செய்யச் சென்று கொல்கத்தா-ஒடிஷா எல்லையில் தமிழக வாகனங்கள் சிக்கியுள்ளன.
வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான சிஎம்சி-க்கு பல்வேறு சிகிச்சைகாக வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கால் சிக்கிக் கொண்டனர். சுமார் 4000-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் சிகிச்சை முடிந்தவர்கள் தங்களை சொந்த மாநிலத்திற்கு திரும்ப அனுப்புமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் அடிப்படிஅயில் சிகிச்சை முடிந்த வடமாநிலத்தவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் 50 வாகனங்கள் தயார் செய்து அனுப்ப ஆட்சியர் முடிவு செய்தார். இதற்காக மாவட்ட நிர்வாக இணையதளத்தில் பதிவினை வெளியிட்டு, விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் தேவையான வாகனங்களை தேர்வு செய்து அனுமதிச் சீட்டு பெறலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி வேலூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் மூலம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு ஆட்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை இறக்கிவிட்ட பின், கடந்த 20ம் தேதி திரும்பி வரும் வழியில் கொல்கத்தா-ஒடிசா மாநில எல்லையில் பலாசூர் என்ற பகுதியில் உள்ள லஷ்மிநாத் சுங்கச்சாவடியில் அம்மாநில காவல் துறையினர் தமிழகத்தை சேர்ந்த 10 கார்கள் மற்றும் ஆம்புலன்சுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த 20-ம் தேதி இரவு முதல் தற்போது வரை 3 நாட்களாக அங்கேயே தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிலிருக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். தங்களை தமிழகம் வர அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.