இந்தியா

நிதி ஆயோக்: சிறந்த மருத்துவ குறியீடுகள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்

Sinekadhara

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சிறந்த மருத்துவ குறியீடுகள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவ குறியீடுகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு இன்று வெளியிட்டது. அதில், சுகாதார கட்டமைப்பு, மருத்துவத்துறை மேம்பாடு, பொதுமக்கள் அணுகும் விதம் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில்தான் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் தெலுங்கானாவும், நான்காவது இடத்தில் ஆந்திராவும் உள்ளது. அதாவது, முதல் 4 இடங்களை தென் மாநிலங்கள் மட்டுமே பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார தலைநகரம் மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும், குஜராத் 6வது இடத்திலும், இமாச்சல பிரதேசம் 7வது இடத்திலும் பஞ்சாப் 8-வது இடத்திலும், கர்நாடகா 9-வது இடத்திலும், சட்டீஸகர் 10வது இடத்திலும் உள்ளது.

ஆனால் தொடர்ந்து மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 8வது இடத்திலும் கேரளா 12வது இடத்திலும் உள்ளது. மிக மோசமான மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் சுகாதாரத் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பட்டியலில் இந்த ஆண்டு உத்தரபிரதேசம் முன்னணியில் இருக்கிறது. சிறிய மாநிலங்களை பொருத்தவரை மிசோரம் மற்றும் திரிபுரா முன்னணியில் இருக்கிறது. யூனியன் பிரதேசத்தை பொருத்தவரை தாதர் நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமன் முதலிடத்தில் உள்ளது.