GST கவுன்சில் கூட்டம்
GST கவுன்சில் கூட்டம் pt web
இந்தியா

GST கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு

PT WEB

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் பேசிய நிதியமைச்சர், 70 சதவிகிதத்திற்கு மேல் சிறு தானியங்கள் கலந்த மாவு வகைகளை சில்லறையில் விற்கும்போது முழு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார். இம்மாவையே பேக்கேஜ் செய்து லேபிளுடன் விற்றால் 5% மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சர்க்கரை ஆலைகளில் உருவாகும் துணைப்பொருளான மொலாசஸ் மீதான ஜிஎஸ்டி வரி 28-இல் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் கரும்பு விவசாயிகள் பலன்பெறுவதுடன் கால்நடை தீவனங்கள் விலை குறையும் வாய்ப்பு ஏற்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மனித பயன்பாட்டுக்கான ஆல்கஹால்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆல்கஹால்களுக்கு வரி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆல்கஹாலுக்கு இரு வித வரி விதிப்பு நடைமுறையால் நிர்வாக ரீதியில் சிக்கல் ஏற்படும் என கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்தார். மேலும் இதனால் தமிழக அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.