ஏஐ தரவு மையங்களை ஈர்ப்பதற்கான போட்டியில் மாநில அரசுகளின் நிதிச் சலுகைகளைவிட, சீரான உயர் அழுத்த மின்சாரத்தை வழங்கும் திறனே முக்கியப் பங்காற்றுவதாகத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வலுவான மின் கட்டமைப்பால் நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தித் திறன்கொண்ட மஹாராஷ்டிரா மாநிலமும் தமிழ்நாடும் ஏஐ தரவு மையங்களுக்கான முதன்மைத் தளங்களாக உருவெடுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.
மஹராஷ்டிரத்தில் 50 ஆயிரத்து 857 மெகவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ளது. இதில் 45 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் வழியிலான மின் உற்பத்தியின் பங்கு ஆகும். தமிழ்நாட்டில் 42 ஆயிரத்து 417 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்பு ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதில் 64 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலம் பெறக்கூடிய மின்சாரம் ஆகும். தேவை அதிகரிக்கும் முன்பே பிரத்யேகத் துணை மின்நிலையங்களை அமைத்ததாலும், கடலடி ஃபைபர் கேபிள் வசதிகளாலும் தரவு மையங்களை ஈர்க்கும் போட்டியில், நவி மும்பை மற்றும் சென்னை முன்னிலை பெற்றுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹைதராபாத் நகரம் 220- 400 கிலோவாட் மின் உற்பத்திக்கான துணை மின்நிலையங்களை விரைவாக அமைத்ததன் மூலம் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கர்நாடகா 1,300 கோடி மதிப்பிலான புதிய மின் கொள்கையை அறிவித்திருந்தாலும், மின்சார விநியோகக் கட்டமைப்பை விரைவுபடுத்துவதே முக்கியச் சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருந்தும், உள்ளூர் மின் கட்டமைப்புப் பற்றாக்குறையால் திட்டங்கள் தாமதமாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.