இந்தியா

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது

webteam

தெற்கு டெல்லியில் பள்ளியின் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அப்பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

தெற்கு டெல்லியில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் சில குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக தெற்கு டெல்லி இணை ஆணையர் விஜய் குமார், “இந்தப் பள்ளியில் படித்த குழந்தை ஒருவர் தனது தாயிடம் வயிற்று வலி என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது அக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அக்குழந்தையின் தாய் எங்களிடம் புகார் அளித்தார். 

இந்தப் புகார் குறித்து விசாரிக்க அக்குழந்தைக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் கவுன்சிலிங் கொடுத்தப் போது அப்பள்ளியின் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் இந்தக் குழந்தைக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் துப்பரவுத் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளோம். 

மேலும் அப்பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் இவர் வேறு சில குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பள்ளியின் சிசிடிவி காட்சியில் இவர் பெண் குழந்தைகளின் கழிவறைக்கு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதுகுறித்து பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தத் துப்புரவுத் தொழிலாளி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளார்கள். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.