இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷின் புதிய ஆடியோவால் விசாரணை தீவிரம்

jagadeesh

முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக சாட்சி சொல்ல தன்னை நிர்பந்திக்கிறார்கள் என கேரள தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் ஸ்வப்னா சுரேஷ் பேசிய ஆடியோ கசிந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு டிப்ளமெட்டிக் பார்சல் மூலம் 3 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகின்றன. தங்கக் கடத்தில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் ஸ்வப்னா சுரேஷ் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறும்படி அமலாக்கத்துறையினர் நெருக்கடி கொடுப்பதாகவும், பினராயி விஜயனுக்கு எதிராக சாட்சி சொன்னால் தன்னை அப்ரூவராக மாற்றுவதாக விசாரணை அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் ஸ்வப்னா சுரேஷ் பேசுவதுபோல உள்ளது. ஸ்வப்னா சுரேஷ் சிறையில் உள்ள நிலையில், இந்த ஆடியோ எப்படி கசிந்தது என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மத்திய அமைப்புகள் முயற்சிகள் செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.