பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டார் என என்.ஐ.ஏ குற்றம் சாட்டியுள்ளது.
தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கக் கூடும் என்றும் கேரளாவை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ் , என்ஐஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தார். பெங்களூருவில் பதுங்கியிருந்த ஸ்வப்னாவை என்ஐஏ சிறப்புக் குழுவினர் கைது செய்தனர். அவரது நண்பர் சந்தீப் நாயரையும் கைது செய்தனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம், கோவை வழியே கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து ஆலுவா ஜில்லா அழைத்துச் செல்லப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோருக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கொச்சி - கிரி நகரில் உள்ள என்ஐஏ அலுவலகம் முன் சாலையில் திரண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கேரள முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அரசியல் தலையீடு கூடாது என்றும் முழக்கமிட்டனர். அப்போது ஸ்வப்னாவை அழைத்து வந்த காரையும், என்ஐஏ அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிட முயன்றனர். ஸ்வப்னா இருந்த கார் மீது சாணி வீசப்பட்டது. அவர்களைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
இதனிடையே, ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், இருவரும் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து, நீதிபதி அனில்குமார் உத்தரவிட்டார். இருவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதால், ஸ்வப்னா திருச்சூர் அமுதா மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சந்தீப் நாயர் அங்கமாலி கொரோனா தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருவரையும் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, என்ஐ அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டார் என என்.ஐ.ஏ குற்றம் சாட்டியுள்ளது. மனுவை நாளை பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே கைதான சரித்குமார் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், METAL CURRENCY என்ற நூதன மோசடி வெளியானது. மலப்புரத்தைச் சேர்ந்த பி.கே.ரமேஷ் என்பவர்தான் METAL CURRENCY என்ற முறையில் மோசடி செய்ததாக சரித்குமார் கூறியதன்பேரில், பி.கே.ரமேஷ் மலப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 5 ஆம் தேதி கைப்பற்றப்பட்ட பெட்டியிலிருந்த காகிதத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் இருந்தது. அந்த நபர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கை ரா உளவு அமைப்பு, நுண்ணறிவு உளவுப்பிரிவு, சுங்கத்துறை, என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், ஸ்வப்னா கேரளாவிலிருந்து பெங்களூர் சென்றது எப்படி ?, அவருக்கு உதவியது யார் ? என்ற கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.