Suvendu Adhikari & Chandranath Rath  PT
இந்தியா

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.. சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை!

பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நிர்வாக உதவியாளரும், அவரது மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவருமான சந்திரநாத் ரத், நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

PT WEB

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக தலைவர் மற்றும் முதல்வர் வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் மத்யம்கிராமில் திட்டமிட்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் அம்மாநில பாஜக தலைவரும் முதல்வர் வேட்பாளருமான சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் (PA) சந்திரநாத் ரத் நேற்று (மே 6) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை என்றும், இரண்டு மூன்று நாட்களாக கொலையை நிகழ்த்துவதற்கு முன்பாக கொலையாளிகள் அப்பகுதியை முன்கூட்டியே நோட்டமிட்டு, தப்பிக்கும் வழியைத் திட்டமிட்டிருந்ததாகவும் புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Suvendu Adhikari

இந்தச் சம்பவம் நெஞ்சைப் பிளக்கும் வகையில் உள்ளது. நாங்கள் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றும், இவ்விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குனர் சித்தநாத் குப்தா தன்னிடம் உறுதியளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இது கடந்த 15 ஆண்டுகால சட்டவிரோத அராஜக ஆட்சியின் விளைவாகும். இங்குள்ள ரவுடிகளை ஒழித்துக்கட்டும் பணியை பாஜக தொடங்கும் என்றும் கூறினார்.

Chandranath Rath''s car

முதற்கட்ட தகவல்கள் கூறுவது என்ன ?

சந்திரநாத் ரத்தை கொலை செய்ய பல நாட்கள் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் வெள்ளி நிற சான்ட்ரோ கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சந்திரநாத் ரத் பயணித்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்பு அந்த கார் ரத்தின் காரை முந்திச் சென்று நிறுத்த சொல்லியிருக்கிறார்கள். நிருத்தியதும் மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் மேலே ஏற்றப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடியின் வழியாக அவரைச் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்ததால் முன்பக்கப் பயணி இருக்கையின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியிருந்ததையும், இருக்கையில் ரத்தக் கறைகள் படிந்திருந்ததையும் காண முடிந்தது. நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பின்னர் அந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் நான்கு இருசக்கர வாகனங்களில் வந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரவு சுமார் 10.30 மணியளவில், சந்திரநாத் ரத் மத்யம்கிராமில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

Chandranath Rath''s car

தாக்குதலுக்கு பின் சந்திரநாத் ரத் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் வந்தடையும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சந்திரநாத் ரத்தின் ஓட்டுநரும் துப்பாக்கிக் காயங்களுடன் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்யம்கிராம் அருகே சம்பவம் நடந்த இடத்திலிருந்து, தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வங்காளத்தின் டிஜிபி சித் நாத் குப்தா கூறியுள்ளார். குற்றத்துக்கு பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட் போலியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

the fake number plate car used for the murder

சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளராக மாறுவதற்கு முன்பு, சந்திரநாத் ரத் இந்திய விமானப்படையில் பணியாற்றியிருந்தார்.

விமானப்படையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, மம்தா பானர்ஜி அரசாங்கத்தில் சுவேந்து அதிகாரி அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டமான 2019-ஆம் ஆண்டின் வாக்கில், சந்திரநாத் ரத் சுவேந்து அதிகாரியின் அதிகாரப்பூர்வக் குழுவில் முறையாக இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.