இந்தியா

“ ராகுல்காந்தி இன்னும் வலிமையாகியுள்ளார்”- விமர்சித்த ஆசிரியருக்கு மீண்டும் பணி..!

“ ராகுல்காந்தி இன்னும் வலிமையாகியுள்ளார்”- விமர்சித்த ஆசிரியருக்கு மீண்டும் பணி..!

Rasus

மத்தியப் பிரதேசத்தில் ராகுல்காந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த காரணத்தினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் முகேஷ் திவாரி. இவர் சமீபத்தில் நடைபெற்ற பள்ளிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதாவது ராகுல்காந்தியை கொள்ளைக்காரர் என்கிற விதத்தில் குறிப்பிட்டு பேசினார். முகேஷ் திவாரியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து முகேஷ் திவாரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதலமைச்சரான கமல்நாத் மீண்டும் முகேஷ் திவாரிக்கு பணி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள கமல்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவரை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரை மன்னிக்கும் மனப்பக்குவம் கொண்டவர் எனவும், அதனால் மன்னித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசியுள்ள கமல்நாத், “ எப்போதும் கருத்து சுதந்திரத்தை மதிக்கிறேன். அதற்காக ஒருவரை மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனி மனிதர் ஒவ்வொருவரும் தங்களின் கண்ணியம் குறையாமல் பேச வேண்டும்” என கூறியுள்ளார்.

“ராகுல்காந்தி தன்னை தரக்குறைவாகவும், ஆட்சேபனைக்குரிய முறையில் பேசிய அனைவரையும் மன்னித்துவிட்டார். இன்னும் சொன்னப்போனால் கூட, இத்தகைய மோசமான கருத்துகள் ராகுல்காந்தியை இன்னும் வலிமையாக்கியுள்ளன. அவரின் தன்னம்பிக்கையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது” என கமல்நாத் கூறியுள்ளார். மத்தியப் பிரசேதத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி கண்டது. முதலமைச்சராக கமல்நாத் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.