இந்தியா

சூனியம் வைத்ததாகக் கூறி, 6 பேர் பற்களை பிடுங்கித் தாக்குதல்: 22 பெண்கள் கைது!

சூனியம் வைத்ததாகக் கூறி, 6 பேர் பற்களை பிடுங்கித் தாக்குதல்: 22 பெண்கள் கைது!

webteam

சூனியம் வைத்ததாகக் கூறி 6 பேர் பற்களை பிடுங்கிக் கொடூரமாக தாக்கி, மனித கழிவுகளை உண்ண வைத்த 22 பெண்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ளது கோபர்புர் கிராமம். இங்கு கடந்த 6 மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேருக்கு உடல்நிலை சரியில்லை. ஊரில் தொடர்ந்து இப்படி நடப்பதற்கு உள்ளூரைச் சேர்ந்த 6 பேர், சூனியம் வைப்பதுதான் காரணம் என சந்தேகம் அடைந்தனர். இந்த சந்தேகம் வலுத்ததை அடுத்து, அவர்களுக்குப் பாடம் கற்பித்தால்தான், இப்படி பின்னி சூனியத்தில் ஈடுபட மாட்டார்கள், நம் ஊரில் அடிக்கடி யாரும் உயிரிழக்க மாட்டார்கள் என ஒன்று கூடி பேசினர்.

இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் பில்லி சூனியம் வைப்ப தாகக் கூறப்படும் நபர்களின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை வீட்டுக்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேலானவர்கள். அவர்களை ஒன்றாகக் கூடி நின்று சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவர்களின் பற்களை பிடுங்கிய கிராமத்தினர், மனிதக் கழிவுகளை உண்ண கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு கொடுமை நடந்தும் அவர்களைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை.  இதுபற்றி தாமதமாக தகவல் கிடைத்து வந்த போலீசார், காயமடைந்த 6 வயதானவர்களையும் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 22 பெண்கள் உட்பட 29 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.