இந்தியா

’சிரித்துக்கொண்டே இரு’: பாக். குழந்தையை வாழ்த்திய சுஷ்மா

’சிரித்துக்கொண்டே இரு’: பாக். குழந்தையை வாழ்த்திய சுஷ்மா

webteam

இதயநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பாகிஸ்தான் குழந்தை ரோகன் மற்றும் அவனது பெற்றோர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 

இதயநோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ரோகன் என்ற 4 மாதக் குழந்தைக்கு இந்தியாவில் சிகிச்சையளிக்க மருத்துவ விசா வழங்கக் கோரி, அந்த குழந்தையின் பெற்றோர் விண்ணப்பித்தனர். இருநாடுகள் உறவில் சமீபகாலமாக ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக விசா பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தையின் தந்தை தனது நிலைமை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஸ் அஜீஸ் ஆகியோரை ட்விட்டர் மூலம் அணுகினார்.

தகவலறிந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்த குழந்தை மற்றும் பெற்றோருக்கு உடனடியாக விசா வழங்க நடவடிக்கை எடுத்தார். விசா கிடைத்தவுடன் இந்தியா வந்த ரோகனுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த ரோகனின் பெற்றோர், சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். ரோகன் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா, எப்போழுதும் சிரித்துக்கொண்டே இரு என்று வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.