இந்தியா

பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்

webteam

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். மோடியை அடுத்து ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதவியேற்றனர். 

மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் பல்வேறு புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கூட்டணிகளுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த அமைச்சரவையில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இடம்பெறவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக தங்களுக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் என கட்சித் தலைமையிடம் சுஷ்மா மற்றும் அருண்ஜெட்லி கேட்டுக் கொண்டனர். இதனைத்தொடா்ந்து புதிய மத்திய அமைச்சரவையில் அவா்களுக்கு எந்த பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை. 

இந்நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா, கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை பிரதமர் தமக்கு அளித்ததாக சுஷ்மா குறிப்பிட்டுள்ளார். இந்த வாய்ப்பை அளித்த மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், பாஜக ஆட்சி வெற்றிகரமாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.