இந்தியா

“பாக். ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை” - சுஷ்மா விளக்கம்

“பாக். ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை” - சுஷ்மா விளக்கம்

Rasus

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் முகாமை அழித்த இந்திய விமானப் படை வீரருக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்துள்ளார். சீனா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அ‌‌ந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார். அப்போது புல்வாமா தாக்குதல் பிரச்னையை எழுப்பிய அவர், இந்தத் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத முகாம்களை அழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார். ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மேற்கொண்டு தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், எனவே, பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது என்றும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.