மங்களூரு தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர், கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் அதீத காய்ச்சல் காரணமாக மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது வயிற்றில் அசாதாரண உணர்வு இருப்பதாக அந்த பெண் கூற, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த ரேடியோலாஜிஸ்ட் கட்டி போன்ற பொருள் இருப்பதாக அத்தம்பதினரிடம் தெரிவிக்கவில்லை. மேலும், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடமும் அதுதொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாற்றாக, அந்த கட்டி போன்ற பொருள் ஹீமோடோமா (ரத்த நாளங்களுக்கு வெளியே உள்ள திசுக்களில் ரத்தம் தேங்குவது குறிப்பாக ரத்தக்கட்டி) எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், தம்பதியினர் CT ஸ்கேன் எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர். அதை நிராகரித்த மருத்துவர், காலப்போக்கில் சரியாகிவிடும் எனத் தெரிவித்திருக்கிறார். காய்ச்சல் சற்றே குறைந்திருந்தாலும், உடல்நிலை சரியாகாத முழுமையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், நிற்க, நடக்க, பிறந்த குழந்தையை சுமக்கக்கூட பல்வேறு சிரமங்களை அந்த பெண் எதிர்கொண்டிருக்கிறார். இதையடுத்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி இருந்தது தெரியவந்தது. இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தொற்று ஏற்பட்டு, அது ரத்தம், நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளுக்கு பரவி பெண்ணின் உயிருக்கே ஆபத்தாக மாறியது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அம்மருத்துவர் இதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 15 அன்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மருத்துவரின் அதீத அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். மனைவியின் சிகிச்சைக்காக லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி டாக்டர் திம்மையா தெரிவித்துள்ளார். மங்களூருவை அதிர வைத்துள்ள இச்சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின் எக்ஸ் தள பதிவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.