சுரேஷ் கோபி - மோடி புதிய தலைமுறை
இந்தியா

”அமைச்சரானதால் வருமானம் குறைந்து விட்டது.. பதவி ” - மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக சுரேஷ் கோபி விருப்பம் தெரிவித்துள்ளார்.

PT WEB

கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சி ஒன்றில் திருச்சூர் தொகுதி எம்.பி-யும் மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சருமான சுரேஷ் கோபி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

20 மக்களைவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தொகுதி நடிகர் சுரேஷ் கோபி நின்ற திருச்சூர் தொகுதி. தேர்தலில் வென்றதை அடுத்து அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

சுரேஷ் கோபி

இந்நிலையில்தான், கண்ணூரில் நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் கோபி, "மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நான் விலக விரும்புகிறேன். அதே நேரம் தனது இடம் கேரளாவின் மூத்த பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சதானந்தன் மாஸ்டருக்கு தரப்படவேண்டும்" என்று கண்ணூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசியுள்ளார். சதானந்தன் மாஸ்டர் விரைவில் அமைச்சராக வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் சுரேஷ் கோபி பேசினார்.

தொடர்ந்து, "திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு மத்திய அமைச்சரானதை தான் விரும்பவில்லை. இதனால் அண்மைக் காலமாகவே வருவாய் குறைந்துவிட்டது. நிறைய சம்பாதித்து நிறைய பேருக்கு உதவ வேண்டும். நான் ஒருபோதும் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததில்லை. தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு, நான் அமைச்சராக விரும்பவில்லை, என் சினிமாவில் தொடர விரும்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினேன்" எனவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

இந்நிலையில், மத்தியமைச்சர் சுரேஷ் கோபியின் இக்கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.