இந்தியா

பெண் சக்தியின் நம்பிக்கை! வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண்! யார் இந்த சுரேக்கா யாதவ்?

பெண் சக்தியின் நம்பிக்கை! வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண்! யார் இந்த சுரேக்கா யாதவ்?

நிவேதா ஜெகராஜா

இந்தியாவின் முதல் ‘ரயில் ஓட்டுநர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சுரேக்கா யாதவ் என்ற மகாராஷ்ட்ராவை சேர்ந்த 57 வயது பெண்ணொருவர், ஆசியாவிலேயே முதல்முறையாக வந்தே பாரத் ரயிலை இயக்கும் (Loco Pilot) முதல் பெண் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார்.

Semi அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை, சோலாபுர் நிலையம் முதல் மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினஸ் வரை கடந்த திங்கட்கிழமை இயக்கியுள்ளார் சுரேக்கா. அவரது புதிய சாதனைக்கு, பிரதமர் - ரயில்வே அமைச்சகம் தொடங்கி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரயில்வே அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுரேக்காவின் வீடியோவில், அவர் வந்தேபாரத் ரயிலை செம கெத்தாக இயக்குவது பதிவாகியுள்ளது. அதன் கேப்ஷனில், “மும்பை – புனே வழியாக, போர் காட் நிலையத்தில் மட்டும் நின்றுசெல்லும் மும்பை டூ சோலபூர் இடையேயான ‘வந்தே பாரத்’ ரயிலை சுரேகா யாதவ் என்ற பெண் இயக்குகிறார். இவர் முதல் பெண் ‘வந்தே பாரத்’ ரயில் ஓட்டுநராவார் (Loco Pilot)’ எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

சுரேக்கா வந்தே பாரத் ரயிலை இயக்குவது போன்ற கம்பீரமான புகைப்படங்களை மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் என்பவர் அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அதை பிரதமர் நரேந்திர மோடி ரீட்வீட் செய்து, “இது புதிய இந்தியாவில் பெண் சக்தியின் நம்பிக்கை! இன்று பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தங்கள் பெயரைப் பதிவு செய்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சகம் தனது ட்வீட்டில், “மத்திய ரயில்வேயின் சாதனைகளில் கூடுதலாக ஒரு சாதனையை சேர்த்துள்ளார் சுரேகா யாதவ்” என்றுள்ளது.

சுரேக்கா யாதவ், கடந்த 1988-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் பெண் ரயில் ஓட்டுநராக பணியேற்றார். அதன்பின் பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது சாதனைப்பட்டியலில் கூடுதலாக ஒரு மலரையும் சூடியுள்ளார் என்றே சொல்லவேண்டியுள்ளது!