சூரத்தில் 20 மாணவ, மாணவிகள் உயிரிழந்த தீ விபத்து சம்பவத்தில், தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் தக்சஷீலா காம்ப்ளக்ஸ் என்ற 4 மாடி கட்டிடத்தில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் நான்காவது மாடியில் மாணவ,மாணவிகளுக்கான பயிற்சி மையத்தில் நடந்த தீ விபத்தில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர் பிழைப்பதற்காக சிலர் 4-வது மற்றும் 3-வது மாடிகளில் இருந்து கீழே குதித்ததில் உயிரிழந்துள்ளனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார். இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கட்டிட உரிமையாளர் பார்கவ் புட்டானி, காம்பிளக்ஸை கட்டிய ஹர்ஷல் வெக்காரியா மற்றும் ஜிக்னேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறபப்டுகிறது.
இந்நிலையில், தீயணைப்பு வாகனங்கள் தாமதமாக வந்ததே, அதிகமானோர் உயிரிழந்ததற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘’தீ விபத்து ஏற்பட்டபோது, என் மகள் கட்டிடத்தின் உள்ளே இருந்தார். தீயணைப்பு நிலையம் இங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் இங்கு வருவதற்கு 45 நிமிடம் எடுத்துக்கொண்டனர். இதனால் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். என் மகள் காப்பாற்றப் பட்டு விட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’’ என்று பரேஷ் படேல் என்பவர் தெரிவித்தார்.
பிரதீக் கன்சாரா என்பவர் கூறும்போது, ‘’படிகளின் வழியாக சுமார் 22-25 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். மேலும் 20 பேர் குதித்து தப்பினர். சம்பவம் நடக்கும் போது அங்கு 70 மாணவர்கள் இருப்பது தெரிய வந்தது’’ என்றார்.