டெல்லியில் வன்முறையை நிறுத்தினால் காவல்துறை தடியடி குறித்த வழக்கை நாளையே விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இதற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் பல்வேறு மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். அதில் ஒரு பகுதியாக ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையில் முடிந்தது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீர் பீய்ச்சி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை ஏற்ற தலைமை நீதிபதி பாப்டே, போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என கருத்து தெரிவித்தார். டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது தொடர்பாக தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது எனவும் முதலில் அங்கு அமைதி நிலவட்டும் எனவும் தெரிவித்தார்.
கலவரம் நின்றால் மட்டுமே வழக்கு விசாரணையை நடத்துவோம் எனவும் யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்லமுடியாது எனவும் குறிப்பிட்டார். வன்முறையை நிறுத்தினால் வழக்கை நாளையே விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.