இந்தியா

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டம்: உறுதியாகிறது அமலாக்கத்துறையின் கைது அதிகாரம்!

நிவேதா ஜெகராஜா

“சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது” என உள்ளிட்ட முக்கியமான சட்டபிரிவுகளை உறுதியப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையின் அதிகாரத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் `சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த உடனேயே, உடனடியாக சோதனைகளை செய்வது - கைது ஜாமின் வழங்குவதற்கு கடுமையாக நிபந்தனைகள் வழங்குவது - சொத்துக்களை பறிமுதல் செய்வது - வழக்கு தொடர்பான விவரங்களை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வது - மேற்பார்வை இடுவதற்கான குறைபாடுகள்’ உள்ளிட்ட பல்வேறு பாதகமான விஷயங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அந்த மனுவில், `சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டம் பிரிவு 50 ல் அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் எந்த ஒரு நபருக்கும் சம்மன் வழங்கவும் ஆவணங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது பல தருணங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அமலாக்கத் துறையின் இந்த சட்ட விதிமுறைகள் ஒரு குடிமகனுக்கு அரசியல் சாசன பிரிவு 20, 21 ஆகியவை வழங்கிய அடிப்படை உரிமைகளை பறிக்கிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு எதிராக, `சட்ட விதிமுறைகளை மாற்றம் செய்யக்கூடாது’ என மத்திய அரசு சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு எதிராக வலுவான ஆயுதமாக சட்டப் பிரிவில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது.

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி டி ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தங்களின் தீர்ப்பை பிறப்பித்தது. அந்த தீர்ப்பில் `மனுதாரர்கள் கேட்கும் சட்டவிதிகளின் மாற்றங்கள் நாடாளுமன்றத்தால் செய்யவேண்டியது. அந்த மாற்றங்களை தவிர்த்து பார்க்கையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 3 ம் கீழ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட முயற்சிப்பவர்கள் அல்லது அதற்கு உதவுவது தெரிந்தால் அவர்கள் பணமோசடி குற்றத்திற்கு ஆளாக நேரிடும். எனவே இந்த பிரிவின் கீழ் விசாரணை என்பது நேரடி மற்றும் மறைமுக வருவாய்களைக் கையாள்கிறது. பிரிவு 3க்கான விளக்கம் தெளிவுபடுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

அமலாக்கத்துறை சொத்துகளை முடக்க அதிகாரம் வழங்கும் பிரிவு 5 ஐ உறுதி செய்யப்படுகிறது. ஏனெனில் இப்பிரிவு சமநிலை செயலை தான் செய்கிறது. அமலாக்கத்துறை சொத்துகளை முடக்க அதிகாரம் வழங்கும் மற்ற பிரிவான பிரிவு 8 (4) உம் உறுதிப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யவும், லாக்கர் உள்ளிட்டவற்றை உடைத்து ஆவணங்களை கைப்பற்றவும் அதிகாரம் வழங்கும் பிரிவு 17(1) , 18(1) உள்ளிட்டவையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கைது செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவு 19, சிறப்பு நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும் குற்றங்கள் என வகைப்படுத்தும் பிரிவு 44, ஜாமீன் வழங்க மறுக்கும் சட்டப்பிரிவு 45, உள்ளிட்டவையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை கட்டாயம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. கைதிற்கான காரணத்தை தெரிவித்தால் மட்டும் போதும்’ என குறிப்பிட்டனர்.