sureme court, waqf board x page
இந்தியா

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் மீது ஏப்ரல் 15 விசாரணை!

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Prakash J

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. இது, கடந்த ஆண்டு நாடாளுமன்ற அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், கடும் எதிர்ப்புக்குப் பிறகு, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் இந்தக் குழுவினரின் ஆலோசனையின்படி சட்ட வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

வக்ஃப், நாடாளுமன்றம்

அதன்படி, இந்த மசோதா சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது. இதற்கிடையே இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மறுபுறம், உச்சநீதிமன்றத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திமுக தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.