திரெளபதி முர்மு, உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

மசோதாவுக்கு கால நிர்ணயம்.. குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கு.. இன்று தீர்ப்பு!

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் மற்றும் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Prakash J

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் மற்றும் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக கடந்த 2023ஆம் ஆண்டு மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ’மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என காலவரம்பை நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மசோதா விவகாரத்தில், ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் உள்ளிட்டோரும், மத்திய அரசு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

உச்ச நீதிமன்றம்

விசாரணையின் போது மாநில அரசு வழக்கறிஞர்கள், அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள்படி, இந்த மனுவை திருப்பி அனுப்புவதை தவிர வேறு வழி கிடையாது என்றும் அனைத்து 14 கேள்விகளுக்கும் தற்போதைய தீர்ப்பிலும், முந்தைய தீர்ப்புகளிலும் தெளிவாக பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதேபோல், மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இவ்விவகாரத்தின் மீதான தீர்ப்பு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று வழங்க உள்ளது. இத்தீர்ப்பு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.