தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கு இடையே அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின்படி, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் டாஸ்மாக் மதுவிற்பனைக்கு உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மதுக்கடைக்கள் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.