பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இந்த தாக்குதலுக்கு தலைமையேற்று வெற்றி கண்டனர். இதையடுத்து, அவர்கள் இணையத்தில் வைரலாகினர். இந்தச் சூழலில், சோஃபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்திருந்தன. இதைத் தொடர்ந்து, விஜய் ஷா தாம் பேசிய திரித்துக் கூறப்பட்டதாகவும், என்றாலும் இதற்கு 10 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, தன் மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர் முறையீடு செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக அமைச்சர் விஜய் ஷா கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ”உங்களுடைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தவிர, அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறியதுடன், உயர்நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், விஜய் ஷா வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.