சமூக வலைத்தள கணக்குகளை வரைமுறைப்படுத்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் கார்டை இணைப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், “தற்போது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவது மிகவும் எளிதாகி விட்டது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
எனவே சமூக வலைத்தள கணக்குகளை முறைப்படுத்த மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை விதிக்கவேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை 3 வாரத்திற்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் தனிமனித சுதந்திரத்தை மீறும் விதமாக இருக்கிறதா என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.