இந்தியா

’இந்த வருடமே என்.டி.ஏ. தேர்வெழுத பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும்’ - உச்சநீதிமன்றம் உத்தரவு

’இந்த வருடமே என்.டி.ஏ. தேர்வெழுத பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும்’ - உச்சநீதிமன்றம் உத்தரவு

நிவேதா ஜெகராஜா

2021ம் வருடம் நவம்பரில் நடைபெற உள்ள என்.டி.ஏ. தேர்வின் போதே, இத்தேர்வில் பெண்கள் அனுமதிக்கப்படும் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது சற்று சிரமமான காரியம். இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க தங்களுக்கு சிலகாலம் தேவைப்படுகிறது. ஆகவே அடுத்த வருடம் மே மாதம் நடக்கவுள்ள தேர்வுக்கு பெண்களை விண்ணப்பிக்க அனுமதிக்கலாம்’ என கூறி, கால நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைத்திருந்தது.

இதில் மே 2022-ல் நடக்கவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேர்வுக்குத்தான் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் இன்றையதினம் தள்ளுபடி செய்துள்ளது. இவ்வருடத்துக்கான தேர்வு வரும் நவம்பரில் நடக்கவுள்ள நிலையில், அதிலேயே பெண்களை அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “பெண்களுக்கு அவர்கள் உரிமை மறுக்கப்படுவதை எங்களால் அனுமதிக்கமுடியாது. பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதையும் தள்ளிப்போட முடியாது. ஆகவே பாதுகாப்பு அமைச்சகம், யு.பி.எஸ்.சி-யுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். நவம்பர் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள NDA தேர்வுகளில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கையை உடைத்து ஒரு வருடம் வரை இந்தத் தேர்வை ஒத்தி வைக்க முடியாது” எனவும் தெரிவித்துள்ளது.

பொதுவாக இத்தேர்வுக்கு முந்தைய தேர்வொன்று நடப்பது வழக்கம். அந்தவகையில் நவம்பர் 2021-ல் நடைபெற உள்ள என்.டி.ஏ. தேர்வுக்கும், ஒரு முந்தைய தேர்வு உள்ளது. இந்தத் தேர்வு, பெண்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புத்துறை எப்போதுமே ‘எமெர்ஜென்சி’ சூழல்களை எளிதாக கையாளும் என்பதை முன்னிறுத்தி இக்கருத்தை முன்மொழிவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.