இந்தியா

"ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர்" - பஞ்சாப் அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

Sinekadhara

ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது.

பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.

வரும் மார்ச் மூன்றாம் தேதி மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவதற்கான சம்மன் வழங்குமாறு சட்டமன்றம் சார்பாக மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி வழங்க மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்துவிட்டார். பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்றதற்கு பிறகு அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரின் முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் அரசியல் சாசன பிரிவு 174 சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இது ஆளுநருடைய அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று மாலை 3:50 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என ஏற்கனெவே பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F1552468288569653%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

பஞ்சாப்பை தொடர்ந்து டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசு மற்றும் மாநில ஆளுநர் இடையே பெரும் மோதல் போக்கு வெடித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு போன்ற பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் ஒரு மாநில பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட மாநில ஆளுநர் அனுமதி மறுப்பது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.