பத்மாவத் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புதிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சட்டம் ஒழுங்கை அரசுதான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
தீபிகா படுகோனே நடிப்பில் உருவான 'பத்மாவத்' திரைப்படம் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளியாகாது என்று அம்மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பத்மாவத் திரைப்படம் வெளியாவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவிட்டனர்.
பத்மாவத் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளித்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பத்மாவத் படத்திற்கு தடைவிதிக்கக்கூடாது என நீதிமன்றம் நேற்றே இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதை’ சுட்டிக்காட்டி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும், “சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது நீதிமன்றத்தின் பணியல்ல மாநில அரசின் கடமை என்று கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்டுவது தான் எங்களது கடமை. அதே நேற்றே செய்துவிட்டோம்” என்று நீதிபதிகள் கூறினர்.