இந்தியா

மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு: மனோகர் பாரிக்கர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு: மனோகர் பாரிக்கர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

Rasus

கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், மார்ச் 16-ம் தேதி சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டன.

இதனையடுத்து, மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி, கோவா மக்கள் முன்னணி மற்றும் 3 சுயேச்சைகள் பாஜக-விற்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து 22 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பாஜக-வின் மனோகர் பாரிக்கர்.

ஆளுநரும் மனோகர் பாரிக்கருக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருந்தார். இன்று 5 மாலை பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.

இதனிடையே, பாஜக ஆட்சியமைக்க எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதில் அதிக எம்எல்ஏக்கள் கொண்ட கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆட்சியமைப்பது தொடர்பாக நீங்கள் ஏன் ஆளுநரை அணுகவில்லை என காங்கிஸ் தரப்பை பார்த்து உச்சநீதிமன்றம் கேட்டது. மேலும் கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.