உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், ‘புல்டோசர் நடவடிக்கை’ என்கிற பெயரில், குற்றம்செய்பவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பானது இந்த புல்டோசர் நடவடிக்கை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இடிப்பு நடந்த பகுதிகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடத்தில்தான் நடந்திருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் விசாரணையின்போது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "குற்றம்சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே அவரது வீடு இடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி அதிக் அஹமதுவுக்கு சொந்தமான சொத்து எனக்கருதி தவறுதலாக, பிரயாக்ராஜ் நகரில் சில வீடுகள் புல்டோசர் பயன்படுத்தி இடிக்கப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வீடு இடிப்பதற்கு முதல் நாள்தான் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜால் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “புல்டோசர் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் மனிதநேயமற்றது. இது எங்களது மனதிற்கு அதிர்ச்சி அளிக்கிறது. தங்குவதற்கு என சட்டத்தில் குடிமக்களுக்கு உரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை இழந்தவர்கள் அதனை மீண்டும் கட்டுவதற்கு ஏற்ற வசதி அவர்களிடம் இல்லை என்பது கவலையளிக்கிறது. வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதை நிறுத்த வேண்டும். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஒரே வழி இதுதான். இதனால், உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு வரும்” என உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும்போது, ஒரு சிறுமி தனது புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓடிப்போகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதுதொடர்பான வழக்கிறகு நீதிபதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மக்களவை எம்.பி.யும் உத்தரபிரதேச சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், "அம்பேத்கர் நகரில், ஒரு அரசு அதிகாரி தனது அதிகாரத்தை நிலைநாட்ட மக்களின் வீடுகளை இடித்து, சிறுமி ஒருவரின் தனது புத்தகங்களை காப்பாற்ற ஓட கட்டாயப்படுத்துகிறார்" எனப் பதிவிட்டிருந்தார்.
அதுபோல் காங்கிரஸ் கட்சியும், "புல்டோசரால் இடிக்கப்பட்ட குடிசையிலிருந்து, ஒரு சிறுமி தனது மிக விலையுயர்ந்த சொத்தை - புத்தகங்களை - காப்பாற்றினாள்! இந்த வீடியோ, குழந்தைகளின் கைகளில் இருந்து புத்தகங்களையும், அவர்களின் தலைக்கு மேல் கூரையையும் பறிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அவமானம்" எனத் தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில், ”இந்த புல்டோசர் நடவடிக்கை குறித்து குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது” என காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். அதன் காரணமாகவே ஆக்கிரமிப்பை அகற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.