போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக, செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க முற்படுவதாக அமலாக்கத் துறை தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், சாட்சிகளை கலைப்பார் என அச்சம் இருப்பின் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என வாதாடினார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவியேற்க அனுமதி தரவில்லை என்றும், மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறிய காரணத்தால்தான் ஜாமீன் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் செந்தில் பாலாஜி அமைச்சரானதை ஏற்க முடியாது என்றனர். அமைச்சராக இல்லை என்பதால்தான் ஜாமீன் வழங்குவதை பரிசீலித்ததாகவும் தெரிவித்தனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை வரும் திங்கள்கிழமை தெரிவிக்க அவகாசம் அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.