இந்தியா

வாகன போக்குவரத்திற்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது? - டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Sinekadhara

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது. காற்று மாசு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அப்போது டெல்லி அரசு, டெல்லியில் முழு முடக்கத்தை அமல்படுத்தவும் தயாராக இருக்கிறோம் என உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது. மேலும், வாகன நிறுத்த கட்டணங்களை 4 மடங்குவரை உயர்த்தலாம்; மெட்ரோ ரயில் சேவை எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தது. தொடர்ந்து திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதை தடுத்து நிறுத்தலாம் உள்ளிட்ட யோசனைகளையும் டெல்லி அரசு வழங்கியது.

அதற்கு, டெல்லியின் நிலை மோசமான நிலையில் இருப்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இயலாது எனவும், உடனடியாக பலன் அளிக்கக்கூடிய விஷயங்களை முன்வைக்கவும் டெல்லி அரசுக்கு நீதிபதிகள் அறிவுறித்தினர். அதனைத் தொடர்ந்து பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்றின் தரம் மாசுபடுவது 10% தான் எனவும், கிட்டத்தட்ட 70% மாசு வாகனங்கள் மற்றும் தூசுகளால்தான் காற்று அதிகம் மாசுபடுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

அதற்கு, தலைநகர் டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தற்காலிகமாக தடுக்கலாம் என்றும், ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை இலக்க எண்களை மட்டும்தான் இயக்கவேண்டும் என்ற பழைய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாம் என்றும், செங்கல்சூளை உள்ளிட்டவை இயங்க இடைக்கால தடைவிதிக்கலாம் என்றும், பொதுமுடக்கத்தை தீவிரப்படுத்தலாம் என்றும் டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொழிற்சாலைகள், வாகனங்களால் 75% காற்று மாசு ஏற்படும் நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும், டெல்லியில் ஒருவாரத்திற்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாமெனவும், காற்று மாசுபாட்டை குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.