supreme court
supreme court pt desk
இந்தியா

“மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற நீதிமன்றத்தை நாடும் நிலையை உருவாக்குவதா?” ஆளுநர்களுக்கு நீதிபதி கேள்வி

webteam

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பஞ்சாப் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை காரணமின்றி நிலுவையில் வைப்பது, திருப்பி அனுப்புவது போன்றவை எப்படி ஏற்புடையதாகும்?” என அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு ஷிங்வி வாதம் செய்தார்.

CM Stalin

இதேபோல, தமிழகத்தில் 12 மசோதாக்களும், கேரளாவில் 3 மசோதாக்களும் நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “ஒரு மசோதாவை ஆய்வு செய்யவும், அந்த இடைப்பட்ட காலத்தில் மசோதாவை நிறுத்தி வைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது” எனக் கூறினார். மேலும், “என்ன காரணத்திற்காக ஆளுநர் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது, “மசோதாக்கள் திருப்பி அனுப்பப்படுவது மற்றும் நிலுவையில் வைப்பது குறித்து அவ்வப்போது மாநில அரசுகளிடம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது” என ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். அப்படி என்றால் மாநில அரசுகள் எதற்காக நீதிமன்றத்திற்கு வருகிறார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபோன்ற விவகாரங்கள் ஆளுநர் மற்றும் முதல்வர்களுக்கு இடையே பேசி முடித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Governor RN Ravi

மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற நீதிமன்றத்தை நாடும் நிலையை உருவாக்குவதா என தெரிவித்த நீதிபதி, தாங்கள் (ஆளுநர்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை ஆளுநர்கள் உணர வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் தரப்புக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்