இந்தியா

தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜா. ஜாக்சன் சிங்

தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் அந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் தேசத்துரோகம் சட்டம் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆங்கிலேயர் காலத்தில் மக்களை அச்சுறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 'எடிட்டர்ஸ் கில்டு' அமைப்பு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹோவ் மொய்த்ரா உள்ளிட்டோர் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தது. இதையடுத்து, இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கானது தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி, "தேச துரோக வழக்கை மறுபரிசீலனை செய்வதற்கான வரைவு அறிக்கை தயாரராகிவிட்டது. ஒரு குற்றத்தை தேச துரோக சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டுமெனில், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அனுமதி வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன" என்றார்.

இதனை கேட்ட பின்னர் நீதிபதிகள், "அப்படியென்றால் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக வழக்குகள் எங்கும் பதியக் கூடாது. இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களும் ஜாமீன் கோரி நீதிமன்றங்களை நாடலாம்" என உத்தரவிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த துஷார் மேத்தா, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். தேச துரோக சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் தீவிரமான பிரச்னைகள் தொடர்புடையவை. தீவிரவாதம், பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இதில் அடங்கியிருக்கக் கூடும். அப்படியிருக்கையில், வழக்கின் விசாரணையை நிறுத்துமாறு உத்தரவிடுவது சரியாக இருக்காது" என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "இந்த வழக்கின் முந்தைய வாதங்களின் போது தேச துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான உதாரணங்களை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலே எங்களுக்கு வழங்கினார். இந்திய குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு தற்போது கூறியிருக்கிறது. எனவே, மறுபரிசீனை முடிவடையும் வரை தேச துரோக சட்டத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகள் விலகியிருக்க வேண்டும் என கூறுவதில் எந்த தவறும் இல்லை" எனத் தெரிவித்தனர்.